அப்பா...
அப்பாவின் நினைவுகள்.......
நீங்காத நினைவுகளை...
விட்டு விட்டு சென்ற அப்பா....
நீங்கள் இல்லாத இந்த உலகில்...
எல்லாமே குறைதானப்பா
இனி
உங்களை எப்போது காண்போம்? அப்பா
உயிரோடு கலந்த எங்களை
நீங்கள உடலால் பிரிய...எநத் காரணமோ...
அது எமன் செய்த சூழ்ச்சி தானா...?
எங்களுக்காக நீங்கள் செய்தது
ஒன்றா? இரண்டா?
உங்களை பிரிந்து ஓராண்டு ஆகியும்
உங்கள் நினைவுகள்
ஒன்று கூட எங்களை விட்டு போகவில்லையே...
ஆறு வயதில்.. ஆயில்
எஞ்சினுக்கு எண்ணை சுமந்து
ஏற்றி வைத்த தீபமாய் எரிந்தீரே இன்னாலும்...
நீங்கள் ஆரம்பித்து வைத்த
உங்கள் உழைப்பு...
அணையாத ஜோதியாய்...
எண்பது வயது வரை...
ஓயாமல் உழைத்தவரே...
நீங்கள்
நிலத்தை உழுது...உழுது....
அந்த மண்ணிற்கும் வலித்திருக்குமோ?
உங்களை கொண்டு சென்று விட்டதே...
நீங்கள் ஓய்வெடுத்தீரா?...இல்லை...
இந்த மண்ணுக்கு...ஓய்வு கொடுத்தீரா...?
காடு கரம்பை எல்லாம் நிலமாக்கி
உங்கள்....
இரத்த...வேர்வை எல்லாம் உரமாக்கி...
காலம் நேரம் பார்க்காமல்.....
கஞ்சி கூழு குடிக்காமல்...
காப்பாத்தி நீ வளர்த்த... கழனியெல்லாம்
காணக் கண் போதவில்லை...நீ
கண்டு செல்ல வருவாயோ... அந்த...
பொன் விளையும் பூமியிலே – நீ
பூவாய் வருவாயா? காயாய் வருவாயா?
பழமாய் வருவாயா? உன்னை
பார்த்து நாங்கள் பாராட்ட...
நீ பட்ட கஷ்டம் பறந்தோட....
பாட்டெடுக்க நாங்கள்
வந்தோம்....
நீ மறைந்த மாயமென்ன?
எந்த பூமி சொந்தமென்று
நீ உழுதாய் எப்போதும்....அப்பா...
அனைவருக்கும் சொந்த பூமி
ஆறு அடியென்று சொல்லி வச்சி சென்றாயோ....
தைமாசம் வருமென்று....
தைரியமாய் இருக்கச்சொல்லி
கைநிறைய காசு சேர்த்தும்....
கலங்காத உன் மனதை....காலன் வந்து
கொண்டு சென்ற காரணம்தான்
என்னவென்று தெரியவில்லை..
ஏங்குகிறோம் உன்னாலே....
வந்த எமன் காத்திருக்க...
வருவாயே வேலை செய்து...
எந்த எமன் கொண்டு சென்றான்..?
தேடுகின்றேன் கிடைக்கவில்லை....
சொந்தங்கள் வேண்டுமென்று
ஊர்ஊராய் சென்றீரே...
அந்த சொந்தங்கள் இப்போது...
உங்களிடம் சொல்லத்தான் வருகிறதே...
வெள்ளை வேட்டி
கட்டி...
வெகுநடையா வந்தவரே... உன்
சொந்த ஜெனம்
காத்திருக்கு...நீ
சொர்க்கம் போன
மாயமென்ன?...
தலப்பா கட்டி
நாத்து நட்டு...
தங்க வயல்
கண்டவரே...
உங்க சொந்தம்
வந்திருக்கு....
உத்தமரே எங்கு
போனாய்...?
முத்து வேர்வை
நீ எடுத்து...
சொத்து சுகம்
தேடாத...
சொந்தம் விட்டு
சென்றவரே...
பந்தம் ஒன்று
பார்த்திடவே...நீ
பக்குவமாய்
வந்து விடு...
கற்ற கலை மறக்கலையே...
உற்ற துணை
யாருமில்லை....
பெற்ற அப்பா நீ
தானே....
போதும் இந்த
வாழ்க்கையே....
பொங்கி வரும்
பூமியிலே....
கனவு ஒன்று நான்
காண...
கண்டிப்பாய்
வந்துவிடு...
நினைவு என்றும்
போகலையே...
நீ தானே சொந்தம்
என்று...அப்பாவே...
சொல்லிடுவேன்
ஊரெல்லாம்....
எங்கு சென்றாலும்....
உன் நினைவு
போகவில்லை....
பூவான உன்
உடம்பு...
பூமிக்கு
பாரமா? இருந்ததில்லை....
படையல் போட்டு
பூஜை செய்தோம்...
பசிபோக்க
வந்திடு....
அருவா
புடிபோட்டு அழகாக கொடுப்பாயே...
ஆக்கி வைத்த
மீன்கொழம்பை சாப்பிடதான்...
இனி அப்பா
வருவாரா? சொல்லுங்களே....
கோடாரி விறகு
வெட்டி
கொண்டு வந்தாய்
கொஞ்ச பணம்
கொத்தனார் வேலை
செய்து
கொண்டு வந்து நீ
கொடுப்பாய்
கூலிதனை...அம்மாவிடம்...
கத்திக்கு
புடிபோட்ட
கட்டழகன்
நீதானே...
உன்னை காண கண்
தேடுதய்யா...
காத்திடுதே
மக்களெல்லாம்...நீ
கண்டு மொழி
பேச....
கத்திய பேச ஆளே
இல்லை...
கட்டிடுவாய்
வேலிதனை
காத்திடுவாய்
பயிர்களையே...
காட்டிடுவாய்
உன் திறமைகளை...
ஏர் ஓட்ட
தெரியும்.... உனக்கு
எருவடிக்க
தெரியும்...
நாற்றங்கால் நீ
செய்தால்
நல்ல பயிர் தான்
வளரும்....
எங்த தொழில்
தெரியாது உனக்கு...?
என்று சொல்ல
தெரியாது....
களையெடுக்க
தெரியும் உனக்கு
கஞ்சி ஊத்த
தெரியும் உனக்கு – அப்பா
கலப்பை செய்ய
தெரியும் உனக்கு
அண்டை வெட்ட
தெரியும் உனக்கு...
அழகாக
வாய்க்கால் போட தெரியும்...
அண்டை கட்டி
மாடு மேய்த்து
அருமையாய் நீ
கறப்பாய்...
பசும்பாலும்
எனக்கே யென்று....
கன்றுக்கும்
பால்விட்டு
காளையாக வளர்த்தவரே...
அந்த....
பாலுக்காக
ஏங்குகிறேனே....என்..
பச்சை மனம்
தாளாது...உன்
பாவி மனம்
கேக்காது....
சீக்கிரமே வந்து
விடு....
நீ... ஒரு சேதி
சொல்ல வந்துவிடு...
எப்போ வருவாய்
என்று....
ஓங்கி குரல்
கொடுத்தால்....அப்பா? நீ தானென்று...
அந்த சேதி
சொல்லிடுவேன்
அனைவருக்கும்
நான் தானே....
என்ன செய்தி
வந்திடும்னு
ஏக்கமுடன்
காத்திருக்கார்...
எங்கள் ஜனம்
கோடி இங்கே....
ஓய்வெடுக்க
சென்ற நீங்கள்
ஒரு குரல்
கொடுத்திடுங்கள்...
ஓடோடு
வந்திடுவேன் – உன்
விட்ட குறை
செய்திடுவேன்...
வியந்திடுவார்
மக்களெல்லாம்....
பட்ட துன்பம்
போதுமென்று
பார்க்க மனம்
வரவில்லையா?
சுட்ட தங்கம் நீ
தானே....
என்னை சொக்க
வைத்த ---அப்பாவே
சோகமாய் நான்
உள்ளேன்-என்
சொந்தமே
போனதென்று....
ஆறுதலாய் ஒரு
வார்த்தை....
அப்பாவே
சொல்லிவிடு....
அதுவே
போதுமென்று ஆனந்தம் வந்துவிடும்....
அப்பாவின்
வார்த்தையிலே...
நிஜமான
வாழ்க்கையிலே – நீ
நிழலாக
வந்துவிடு...
அழகான
வாழ்க்கையின் அஸ்திவாரம் நீ தானே...
கரும்புக்கு
தீனி வைத்து
கண்டதுண்டே பல
வண்டி....
கரும்பு கால்
பதித்து
கற்றுக்கொடுத்த
பாடம்...
கற்றதெல்லாம்...
மறக்கவில்லை
காலந்தான்
மாரிடுச்சு...
காப்பாத்தி நீ
வளத்த
கலையெல்லாம்
போயிடுச்சு...
வழைத்தோப்பு
வச்சி
வண்டி வண்டி
எருவும் வச்சி
வகை வகையா
செய்தீரே...
மிளகாய் தோட்டம்
போட்டால்...
அழகாய்
காய்த்திடுமே....
கண்திஷ்டி
வருமென்று....
கல்யாண
முருங்கையிலே....
கவிழ்த்து
வைப்பாய் ....பானை ஒன்றை...
மூக்கும்
முழியுமாக..
மொத்தமாய் பொட்டு
வைத்து
போக்கிடுவாய்
பயத்தை எல்லாம்...
ராத்திரி
வேலையிலும்...
எந்த பக்கம்
சென்றாலும்...
அய்யனார்
அப்பன்போல...
அமர்ந்திருக்கும்
அந்த பொம்மை...
அத்தனையும்
உங்கள் செயல்
இந்த வேலை யார்
செய்வார்...?
இனி அந்த
தோட்டம் தனை.....
மார்கழி
மாதத்திலே....
அந்த - மங்கலத்து....
பம்பைக்காரன்
வந்தால்....
பாதித் தூக்கத்திலே எழுந்து நீயும்...
சாமி ஆடி
முடிஞ்ச... பாட்டிக்கு...
கையிலே கற்பூரம்
ஏற்றி...
வாயிலே போட்டு
மலையேற்றி சென்றாயே...
உடுக்கைகாரன்
வந்தால்....
படுக்கை
விட்டெழுந்து...வாசலிலே
பசுஞ்சானி நீர்
தெளித்து...வாசல் பெருக்கி...
பக்குவமாய்
கோலமிட அம்மாவை
கூப்பிடவே....அப்பாவே
வந்திடுங்கள்....
வெள்ளி
முளைக்கையிலே...
தூக்கம்
களைந்திடுமே...உனக்கு இப்போ
வெச்ச சோறு
சாப்பிடவே
வந்திடுவாய்
சீக்கிரமே....
நட்சத்திரம் நீ பார்த்து...
நன்றாக சொல்லிடுவாய்...
நடு சாமம் எதுவென்று...
வளர்பிறை நீ பார்த்து...
வச்சிடுவாய் நல்ல நேரம்...
தேய்பிறை நீ பார்த்து
தேய்ந்தது தான் கெட்ட நேரம்...
வெள்ளை நிலவை வச்சு
விதை தெளிப்பாய் அந்நேரம்...
பஞ்சாங்கம் பார்க்காமல்
பகுத்தறிவாய் சொன்னவரே...
சூரியனே தெய்வமென்று...
காலையிலும்...மாலையிலும்...
கண்டிப்பாய் நீ தொழுவாய்....
வான சாஸ்திரத்தில் நீ...
வச்ச சட்டம் ஏராளம்...
இடிமின்னல் பார்க்காமல்
இரவு பகல் தேடாமல்...
எப்பவும் நீ உழைத்தாய்....
உனக்கு படிக்க தெரியாதென்று....
படிக்க வைத்தாய் என்னையும்தான்...
படித்த சொல் கேட்டிடவே...
சென்ற இடம் தெரியலையே....
பாட்டெழுதி தேடுகின்றேன்....
பார்த்தவர்கள் சொல்லிடுங்கள்....
பச்சரிசி கஞ்சி ஊத்த....என்
பாசமுள்ள அப்பாவை.....
மண்சட்டி பானையெல்லாம் – உன்
மகத்துவம் சொல்லிடுச்சி
தொம்பை நெல்லை தொட்டுபார்த்தேன்
உன் துயரம் என்னவென்று....
இப்பவும் தெரிந்து கொண்டேன்...
நீ தான் ராசாவென்று...
கோழி கூவிடுச்சு...நீ
கொண்டு வந்த மாடுகளை
மோழி கட்டி ஏர்ஓட்ட
மொத்த ஜனம் காத்திருக்கு...
மோர்சொம்பு கூழ் குடிக்க...
நீ ஓடோடு வந்துவிடு....
ஆடிப்பட்டம் நீ நட்டு
அறுத்தெடுப்பாய் கட்ட சம்பா....
தேடி விதை கொடுத்திடுவாய்...நீ
தெருவெல்லாம் நிறைந்திடுவாய்...
வாய்க்காங் கரையோரம்... நீ
வச்சி சென்ற மல்லிகையில்...
வண்டு வந்து மொய்த்திடுதே...
வந்துவிடு அப்பா நீங்கள்...
தும்பை பூபோட்டு....நீ
தூக்கி வைச்ச
பால் சொம்பு
என் மந்த சளி
போக்கிடுச்சு...அப்பா
மறக்காமல் வந்து
விடு....
ஆமணக்கு
விதையெடுத்து
நீ...காய்ச்சின
விளக்கெண்ணை...
அறிய வலி
போக்குதய்யா...
அப்பாவே வந்துவிடு...
வல்லாரை கீரைக்காக...அப்பா...
வரப்பெல்லாம் சுத்தினாயே....
பொல்லாத மறதிபோக்க...நீங்கள்
போதும்தான் செய்ததெல்லாம்...
வேலைக்கீரைக்காக வேலியெல்லாம்
சுத்தினாயே...என் வயித்து புண் போயிடுச்சி
வருத்தம் வேண்டாம் வேண்டுகிறேன்...
வந்துவிடு...அப்பாவே...
பாவ கொடி...இலையெடுத்து...
பச்சிலை நீ செய்வாய்...
கண்ணுக்கு சாறுவிட்டு...
கண்டவலி போக்கிடுவாய்....
ஆடாதொடை இலையிலே
பல அற்புதங்கள் செய்வாயே....
வேப்பங்கொழுந்து கொண்டு...
வேண்டிய நோய் போக்கினாயே....
எள்ளு செடியிலே....
எண்ணை பிழிந்திடுவாய்...
வாரம் ஒரு முறைதான்...நீ
வலிக்காமல் தேய்த்திடுவாய்...என்
வயிற்று வலிபோக்க....நீ
செய்யாத வைத்தியம்தான் எத்தனையோ...
உள்நாக்கு வலியென்றால்...
உன்னிடம்தான் வந்திடுவார்....நீ
உச்சி முடியெடுத்து
உடனே வலி போக்கிடுவாய்...
கீழாநெல் சாறெடுத்து...
பசும்பாலில் கலந்து நீயும்....
மஞ்சள் காமாலை போக்கிய...
மகத்துவம்தான் சொல்லிவிடு
முடக்த்தான் கீரையிலே...
முத்தான வைத்தியமும்...
குழந்தைக்கு செய்திடுவாய்...
குற்றம் ஒன்றும் வாராமல்...
புண்ணாக்கு மாட்டுக்கு
புதுசாய் ஊறவைத்து...தீணியாய் நீ கலந்து
திகட்டாமல் வைத்திடுவாய்...
பருத்தி நீ விதைத்தால்....பார்ப்பவர்கள் ஏராளம்...
மருந்து கலந்து நீயும்....
மறக்காமல்...விதைப்பவரே....
தென்னை மரமேறி...
தேங்காய் பறிக்கையிலே...
உன்னைச் சுத்தி வந்திடுமே...
தூக்கணாம்
குருவிகளும்....
தீபாவளி
திருநாளில்
திணைமாவு நீ
பிசைந்து
தின்னவும்
கொடுப்பாயே...
அதிரசம் அதில்
செய்து
எப்பாவும்
கொடுப்பாயே....
முள்ளு
வேலிபோட்டு...
கிட்டி நீ
புடிச்சா...கிட்டவே அண்டாது
கீரிகொத்தும்
பாம்பு கண்ணு....
மூங்கில்....வேலிபோட்டு....
கிட்டி நீ
புடிச்சா..எட்டி பார்க்காது....
எந்த நாயும் உன்
கோட்டை....
மாட்டுக்கு.... மூக்கு துளைபோட்டு
மூக்கணாம் கயிறு...கட்டி
நீ கண்ட காளைகளை
இனி யார் பார்ப்பார் வீதியிலே...?
மாட்டுக்கும் வைத்தியம் பார்த்த
மருத்துவரும் நீ தானே...
ஓலை கொட்டாயிலே –
ஓரமாய்...
பன்னி...நெய்வைத்து
பக்குவமாய்...நீ காப்பாய்...
அந்த பசு...மாடுகளை...
எத்தனையோ செய்தீரே...
அத்தனையும்...அப்பா
கடவுள் செய்த காரியம்போல்...
கச்சிதமாய் முடிந்தன்றோ?.....
கண்டதும் செய்வாயே – அந்த
கற்ற கலை சொல்லி தர...
நீ எப்போ வரபோற...இனி இந்த பூமியிலே
கற்பனை செய்கின்றேன்...
அந்த கற்றகலை மறக்குதய்யா....?
காணாத உன் முகம்தான்...
பள்ளிக்கே செல்லாமல்...தாங்கள்
கற்றுக்கொண்ட
பாடந்தான் எத்தனையோ...
மண்ணை பொண்ணாக்கும்...
வித்தைகள் எத்தனையோ...
மறக்காமல் செய்வாயே...அப்பா...
அந்த மார்க்கந்தான் சொல்லிதர
எப்போ வரபோர....
நாங்கள் ஏங்குகிறோம் உன்னிடத்தில்
நொச்சி...கூடை செய்து
அச்சு பிழகாமல் அடுக்கடுக்காய் கொடுப்பீரே...
அதை...
வச்சி மண்யெடுத்தால்...
வரப்பு என்றும் மாறாதே...
ஆத்து மண்ணெடுத்து
அழகான செவுரு வச்ச...
பனைமரத்து வாரை அறுத்து
பக்குமாய் செய்த...வீட்டு
எறவானம் தேடுகின்றேன்...அப்பா
எங்குமே கெடைக்கலையே...
கண்ணிலே தூசி வீழ்ந்தால்
கண்ணாடிக்காரை தேடி வருவார்...
கையாலே கசக்கி நீ வீடுவாய் மூலிகை சாறு....
தெளிவான கண்ணாலே தெரிந்திடுமே உலகமெல்லாம்...
நாக்கால் நீ தடவி... தூசெடுத்து....
நல்ல கண்ணாய் சரிசெய்வாய்...
வலியெல்லாம் பறந்து போகும்...
வற்றிபோகும் கண்ணீரும் தான்...
பச்சிலை வாயில் போட்டு
பத்தியம் இருக்கச் செய்து
பாம்புகடி போக்கிடுவாய்...
சுளுக்கு எடுப்பாய் என்று – அப்பா
உன் சுற்றத்தார்ர் வந்து தேடுகின்றார்
நோகாமல் சுளுக்கு எடுத்து – எங்கள்
துயரம்தான் போக்கினாயே....
அத்தனையும் செய்து பார்த்த
உத்தமனே நீ தானப்பா....
தீனிதின்னா மாட்டுக்கு....
பிரண்டை மருந்தரைச்சி...
உருண்டை பல செய்து....
நாக்கை கையில் பிடித்து...(நன்றாக)
ஊட்டி விட்ட நல்லவரே....
பசுக்கன்று பசிபோக்கி...
எங்கள் பசி தீர்த்தவரே...எங்கள்
பித்தம் தெளிந்திடுச்சி...
நீ இனி எப்போ வரப்போர
என் துயரந்தான் பெருகுதே....
தண்ணீ போர்போட...கச்சி சுழல வச்சி...
நீரோட்டம் உள்ளதென்று....
நிச்சயமாய் தெரிந்து சொல்ல
நீ எப்போ வரப்போர....அப்பா....
எனக்கு பாட்டெழுத தெரியாமல்....
உன்னை
பிரிந்த துயரத்தால்....
பிதற்றுகிறேன் வந்து பார்...அப்பா...
சப்பந்தான் ஓடையும், தென்னவேலியும்
உனக்கும் சம்மந்தம் உண்டா? அப்பா....
நடுதெட்டும், ஓடவேலியும் உனக்கென்ன
உறவா அப்பா?
கல்லிமோட்டு வேலியும், கலத்து மோட்டு
வேலையும் உன்னை
கலங்கடித்ததா அப்பா...?
ரெட்டி சதுரத்திலே பரம்பை....
கட்டி அடிப்பாயே....அப்பா....
கோர்க்காட்டு ஏரியிலே....
கொண்டு வந்தாய்...மீன் எனக்கு
களி தின்று வளர்ந்தவரே....
கல்லான உன் உடம்பு
மண்ணோடு மறைந்த....
மாயந்தான் என்னவோ?
குறவன் மொறம் கொண்டு
குவியலாய்...தூர்த்தி எடுப்பாய்
குள்ளஞ்சம்பா...பல மூட்டை
மடங்களும், மகசூலும் நீ மறந்ததுண்டா?
மழையும் வெய்யிலும் நீ பார்த்ததுண்டா?
சின்ன குழந்தை பெற்றெடுத்த – மூத்த
செல்லமே.... நீ தானப்பா....
குப்ப கவுண்டரின்
குடி....வாரிசே நீ தானப்பா....
நால்வரோடு பிறந்த நல்ல தங்கம் நீ தானே....
நாகமுத்து... தண்டபாணி...தம்பிகள் சென்ற இடம்
தங்களுக்கும் தெரிந்திருக்கும் இந்நேரம்
உன் அம்மாவும் அப்பாவும் சென்ற இடம்
அறிந்திருப்பாய் இந்நேரம்....
எங்கள் ஐயவரைப் பெற்றெடுத்த – அருமை
அப்பாவே....நீங்கள் தானே?
மண்ணெயெல்லாம் திருத்திய நீங்கள்
மண்ணோடு மறைந்த மாயமென்ன?
தெரியலையே.....
ஆற்று மணலெடுத்து
அழகழகாய் வீடுகட்டி....
வீடுகட்டி....வீடுகட்டி...நீ
விட்டு சென்ற மாயமென்ன..?
நீ...பாட்டெடுத்த பூமியெல்லாம்
பார்க்க மனம் போதலயே....
ஐப்பசி அடைமழையில்...
பச்சரிசி கஞ்சி வச்சி...
பக்குவமாய் கொடுத்திடுவாய்...
காட்டு மரம் நீ வெட்டி...காயவைத்த விரகினிலே...
பொங்கலிட்டு வேண்டுகிறோம்...
பால்பொங்கி வருமுன்னே...
கோவிந்தா சொல்லிடவே...
கூப்பிட ஆளில்லை...அப்பா
சாப்பிட நேரமாச்சு சட்டுன்னு வந்திடுங்கள்...
புத்தம் புது சாலு கட்டி
ஏத்தம் ஏறி...நீ இறைத்தால் – அப்பா
எங்குமே வெள்ளக்காடு....
புதுசான வாய்க்கால் வெட்டி
கம்மம் கூழுக்காக காத்திருப்பாய் பல நேரம்...
ஏரித்தண்ணி நீ பாய்ச்ச
எழுந்திருப்பாய் நடு சாமம்
பம்பு செட்டு போட்டு
படுத்திருப்பாய் முழு சாமம்...
திருடன் வருவான் என்று
உறங்காமல் விழித்திருப்பாய்....
ஏர் பிடித்து நீ உழுதால்...
எங்கேயும் பசுமையாகும்...
மோர் ஊற்றி நீ குடித்த கூழால்...
உழுவாயே உலகமெல்லாம்...
கார் அரிசி பயிர் செய்தவரே....
காரணமே இல்லாமல்....நீ
மறைந்த காரணம்தான்...என்னவோ?
ஏரிவாய்க்கால் தண்ணி கொண்டு...
எப்போது ... நீ வருவாய்...?
சோறுபோட்டு நீ வளத்த
சொந்தங்கள் வேண்டுதய்யா....
உன்னைப்பற்றி...
பாட்டெழுத போதாது
பக்கந்தான் மாலாது...
தூக்கம் கலைந்துவிடும்....உன்
துயரம்தான் கேட்டாலே....
ஏக்கம் கலைந்து விடும்
எங்க ராசா உன்னாலே...(வந்தாலே)
மயக்கம் கலைந்து விடும்...உன்
மந்திரம் சொன்னாலே...
தயக்கம் ஏதுமில்லை...நீ
தப்பாமல் வந்துவிடு...
தச்சு வேலை செய்த
தங்க மனசுக்காரர்...
தரிசு நிலம் காத்திருக்கு....நீ
தத்தெடுக்க வருவாயா...?
பேச்சு கொடுத்தாலே...
என் பித்தம் தெளிந்துவிடும்...
நீ மூச்சு விட்ட நேரம்...
என் நிம்மதி போச்சுதய்யா...
கறந்த பால் ஆறும்முன்னே...நீ
கண்டாயா சொர்க்கம் அதை....
பச்சைமரம் காயலையே....
பாவி உன்னை கொண்டு சென்றான்...
பச்சை வயல்... நீ பதித்தாய்...
பாசம் அதை ஊட்டி வைத்தாய்...
கலத்து நெல் வந்திருக்கு...
குளத்து மீன் வறுத்திருக்கு...
பலத்தை யெல்லாம் நீ காட்டி...
மூட்டை தூக்கி போடுவோயே...உன்
முதுகு தான் வலிக்காதே...நீ
முத்தம் ஒன்று எப்ப...தர...?
காய்ந்த நெல் நீ சுமந்து...
கழுத்து வலிக்காமல்...
சின்ன முதலி ரைஸ் மில்லில்
நீ சிந்தாமல்....
அரைத்து எடுத்து வந்து...
அரிசி தவிடு என்று...
தனித்தனியே தருவாயே....
கட்ட வண்டி கட்டி...காளைமாடு நீ பூட்டி...
பயிறு மூட்டை அதில் ஏற்றி...
விழுப்புரம் சென்று...பணம் கொண்டு வருவாயே...
புத்தாடை நீ வாங்கி
பொங்கல் பண்டிகையில்...
புதுசு புதுசாய் கொடுப்பாயே....
கட்டு சோறு கட்டி...
காத்திருப்போம் திருவிழாவில்..
கண்டதும் சொல்லிடுங்கள்...
கடவுளே என்று சொல்லி...
கச்சை கருவாடு...நீ
கண்டதுதான் சுடுகாடு...
இசச்சை கொடுப்பதுபோல்...உன்னை
இம்சை செய்தாரா...?
கொஞ்சி தாலாட்ட...உன்
குழந்தை மனம் வாராதா...?
நிறைந்த மனசுக்காரர்..
நெஞ்சிருக்கு...பேசலயே...
பரந்த மனசுக்காரர்...
பாவம் உன்னை கொன்றோமோ...?
சிறந்த வேலைக்காரர்...நீ
சிந்தித்த வேலையிலே...உன்
சித்தம் கலைந்ததய்யா...?
ஓய்ந்திருந்த நேரத்திலே...
உன் உயிர் பிரிந்த மாயமென்ன...?
கந்தவேல் வந்திடுத்து...
கரகம் சத்ததம் கேட்டிடுச்சி...
காவடி நீ ஆட...கஞ்சி கூழு நீ ஊற்ற..
காட்டிடு உன் முகத்தை...
எந்த வேலை நீ செய்யவில்லை
எதற்காக நீ மறைந்தாய்...?
பிள்ளைகள் மேம்படவே..
கூலி வேலை செய்து..
காலேஜ் படிக்க வைத்தாய்
காசு பார்க்கும் முன்னே
கரைந்தாயே...மண்ணுக்குள்ளே...
திருப்பதிக்கே வந்து...என்
திருமணந்தான் செய்துவைத்தாய்...
உன் பேத்தி டிசிஎஸ்...
உன் பேரன் இன்போசிஸ்..
சென்றுவரும் வேலையிலே...
கண்டு மனம் குளிர...அந்த
காட்சி காண நீ இல்லை...
எந்த செலவுக்காக...
நீ சென்றாய் எமன் கையில்...உனக்கு
காசுக்கு பஞ்சமில்லை...
எமனுக்கும் விருந்து வைப்பே – நீ
இருந்தால் என்னோடு...
கோயில் வேலைக்காக...
கூட்டதும் ஓடுவாயே...
கூத்தாடி சோறு செய்ய..
காத்திருப்பாய் எந்நாளும்...
அணையாத ஜோதி நீங்கள்...
அப்பாவே எங்களுக்குத்தான்..
எந்த சுகம் நீ கண்டாய்? அப்பா
எங்கள் சுகம் பார்த்து வர...
சென்றீரா சொர்க்கம் காண...
அப்பாவே நீங்கள் இல்லா
எந்த நாளும் விடியாதப்பா...
சுத்தமாய் வேலை செய்ய..
சுந்தரமூர்த்தி தேடுகின்றார்...
கச்சிதமாய் வேலை செய்ய – உன்னை
கன்னியப்பர் தேடுகின்றார்...
வேப்ப மரத்தடியில் வெள்ளையர் தேடுகின்றார்
குடிசை வீடுகட்ட கொங்கனார் தேடுகின்றார்
தப்பாமல் வேலை செய்ய தனுசுவும் தேடுகின்றார்
செம்பியபாளையம் செல்ல – நம்ம
செட்டியார் தேடுகின்றார்...
ஆட்டு கறிபோட அம்மட்டர் தேடுகின்றார்..
ராமாயணம் பாடி ராமானுஜம் தேடுகின்றார்...
பூஜை செய்யவேண்டி –
ராஜாமணி
பூசாரியும் தேடுகின்றார்....
சந்தைக்கு போய்வர – உன்னை
சாம்பசிவம் தேடுகின்றார்...
பச்சை மரம்வெட்ட
பாலகிருஷ்ணன் தேடுகின்றார்....
கஞ்சி ஊத்த...கண்ணையர் தேடுகின்றார்...
உச்சி வெயில் பார்க்காமல்
எச்சில் கூட்டி முழுங்காமல்...
உத்தமரே வேலை செய்ய –உன்னை
உளியரும் தேடுகின்றார்....
நல்லா வேலை செய்ய நமச்சிவாயம் தேடுகின்றார்...
ஆத்து வேலை செய்ய...ஆறுமுகம் தேடுகின்றார்...
சுறுசுறுப்பாய் வேலை செய்ய
சுப்பிரமணியம் தேடுகின்றார்....
பொத்தி பொத்தி நீ வளர்த்த.- சேரி
முத்து தேடுகின்றார்...
கெங்கையம்மன் கோவிலிலே
ரங்கசாமி தேடுகின்றார்...
வேலிகாத்தான் விறகு வெட்ட
வீரப்ப மாமா தேடுகின்றார்...
பாங்குடுன் வேலை செய்ய – உன் பங்காளி
பாண்டுரங்கம் தேடுகின்றார்...
தகுதியாய் வேலை செய்ய
தண்டபாணி தேடுகின்றார்...
பொறுப்பாக வேலை செய்ய..
போண்டியார் தேடுகின்றார்...
ராத்திரி காவல் செய்ய உன்
ராமு தம்பி தேடுகின்றார்...
அன்பாக சமையல் செய்து
அம்மாவும் தேடுகின்றார்...
எப்பப்பா வரப்போ? இனியும்
நிக்காமல்...
அப்பாவே வந்திடுங்கள்...
அனைவரும் இங்குள்ளோம்...
மார்கழி மாதத்திலே...மறக்காமல்..
கோழி கூவுமுன்னே...
காலையிலே எழ வச்சி...
எங்களை படிக்க வச்சி...
காது குளிர கேட்பாயே....
தைமாச பொங்கலிலே....அப்பா
தப்பாமல்..விருந்து வச்ச...
அந்த விருந்து வேண்டுமென்று
வந்தவர்கள் கோடி கோடி...
ஏக்கமுடன் காத்துள்ளார்...நீ
எப்போ வரப்போற...எங்கிட்ட சொல்லிவிடு...
மாட்டை குளிப்பாட்டி நீ...
மஞ்சள் தடவி வச்சு...
வண்ணங்கள் பல பூசி..
வகைவகையா தோரணம் கட்டி....
மந்தைகரை சென்று வர...அப்பா
மனசார அனுப்புவாயே....
கிருஷ்ணன் வந்தானென்று
ஒலைக்கை தாண்ட சொல்லி –
அம்மாவை கூப்பிட்டு
ஆரத்தி எடுக்கச்சொல்லி – வீர
திலகம் இட்டு நீயும்
வீட்டின் உள்ளே வரசொன்னாயே...இப்போ
கிருஷ்ணனும் நீயும்தான்
சேர்ந்து வருவீரென்று...
பச்சரிசி மாவாலே...
வீடெல்லாம் கோலம்போட்டு...
விளக்கெரிய காத்திருக்கோம்...அப்பா
ஒரு விந்தை சொல்ல வந்திடுங்கள்....
காவடி திருவிழாவில்..
காப்பு கட்டி தேர் ஓட்ட – நீ
கண்டிப்பாய் வந்துவிடு...
சித்திரை திருவிழாவில்...உன்னை
சித்தப்பா வரச்சொன்னார்...
சத்தம் போட்டு கத்துகிறேன்...அப்பா நீ
சத்தியமாய் வந்துவிடு...
மாரியம்மன் திருவிழாவில்
மாட்டு வண்டி சாமி பூட்ட – நீ
மறக்காமல் வந்துவிடு...
மாசி மகம் காண
மக்கள் கூட்டம் அலைமோத
திருக்காஞ்சி சென்று வர
தேடுகின்றேன் வந்துவிடு...
அழகர் திருவிழாவில்
வண்டி கட்டி அழைத்து சென்று
அங்க பிரதட்சணம் செய்தவரே..
அழகர் வந்துவிட்டார்...அப்பா.
நீங்கள் வந்துவிடு...
ஆடித் திருவிழாவில்...
ஓடி வேலை செய்தவரே..
பாடி நாங்கள் தேடுகின்றோம்..
பட்டுனு வந்துவிடு...
கூழ் ஊற்றும் திருவிழாவில்...
கூத்தாடி விருந்து வைக்க...
கூப்பிடாமல் வந்துவிடு...
கோகிலாம்பாள் திருவிழாவில்
தேர் வடம் நீ பிடிச்சு...
கொண்டு வந்தாய் கூடை சோறு...
ஈஸ்வரன் சன்னதியில்..
எப்போவும் காத்திருப்போம்...
பூக்காரன் வாசலிலே...
தேர்வந்து நின்னிடுச்சி...
தேடுகின்றேன்...வந்துவிடு...
அரவான் திருவிழாவில்
அதிர்வேட்டு சத்தம் கேட்டு
அப்பாவே வந்துவிடு...
ஏம்பலம் திருவிழாவில்
எல்லோரும் காத்திருக்க
எங்கு போனாய் சொல்லிவிடு....
கோர்க்காட்டு திருவிழாவில்..
கொஞ்ச மனம் காத்திருக்க...உன்னை
கொண்டு சென்ற இடம் தேடி...
அலையரோம் வீணாய் நாங்கள்...
அப்பாவே வந்து விடு...
தென்னல் திருவிழாவில்...
பாஞ்சாலி நாடகந்தான்...
இரவெல்லாம் விழித்திருந்து
கூத்து பார்த்துவர
நீ கூப்பிடாமல் வந்துவிடு...
பச்சை மண்ணெடுத்து...
பாவாடைராயன் சாமி செஞ்சு...
படையலும் நீ போட்டு...
பார்புகழ வைத்தாயே...
குலதெய்வ திருவிழாவில்...
மொட்டை போட்டு காதுகுத்தி...
பம்பை உடுக்கை வச்சு...
கரகம் சிலம்பாட்டம்...
கண்டு சென்ற நாயகரே....
இருச்சார் அமைச்சார்...
இஷ்ட தெய்வம் இதுவேயென்று
சொல்லி வச்சு சென்றவரே...
இனியும்...தாமதிக்க நேரமில்லை
தப்பாமல் வந்துவிடு...
சொந்தங்கள் காத்திருக்க...
சொல்லாமல் வந்துவிடு...
உங்கள் மகன்
சக்திவேல்
9841787137
monoindiadotcom@gmail.com
9841787137
monoindiadotcom@gmail.com
உங்கள் கவிதையை 2019 ஜுலையில் படித்தேன். வரிக்கு வரி அனைவரது அப்பாக்களையும் நினைவுபடுத்திவிட்டீகள்.. ஒரு விவசாய குடும்பத்தில் இருந்து படித்து கொஞ்சம் முன்னேறியிருக்கும் யாரும் உங்கள் கவிதையைப் படித்தால் கண்ணீர்விடாமல் இருக்க முடியாது......படிக்கும் போது....ஆங்காங்கே கண்களை கண்ணீர் மறைக்கிறது.
ReplyDelete